ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைவு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்துக்கு அதனை இன்று திங்கட்கிழமை முன்வைத்த பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி இருந்தன.
பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைவு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தப் பிரரேணை இன்று நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசு வாக்கெடுப்பைக் கோராமல் இருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளைமறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத் தொடர் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு முன்னதாக இன்று இலங்கை மீதான மீதான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இலங்கை அரசு இந்தப் புதிய தீர்மானத்தையும் சர்வதேச தலையீட்டையும் தொடர்ந்து மறுத்து வருகின்றது.
