வவுனியா – வேப்பங்குளத்தில் அரச ஊழியர்கள் போராட்டம்.
வவுனியா, ஓமந்தை, வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத் திட்டத்துக்கு செல்லும் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதம் அடைவதாகத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள கருங்கல் குவாரி ஒன்றிலிருந்து தினமும் 60 இற் கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சென்று வருவதனால் சிறிய வீதியாக உள்ள குறித்த வீதி தற்போது சேதமடைந்து மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் மாற்றம் அடைந்து இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனத் தெரிவித்தும், அந்தப் பகுதி மக்கள் இதன் காரணமாக விபத்துகளுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்தும் அவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமந்தை, வேப்பங்குளம், விளாத்திக்குளம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வீதியை ஊடறுத்துச் செல்லும் ரயில் பாதையில் பாதுகாப்பு கடவையின்மை மற்றும் ரயில் செல்கின்ற போது சமிச்சைகள் இல்லை எனவும் இதன்போது அவர்கள் தெரிவித்ததுடன் அதனை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடியதோடு இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் ஒரு மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

அங்கு வருகை தந்த ஓமந்தைப் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களோடு கலந்துரையாடியதுடன் பிரதேச சபை தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கற்குவாரியின் உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பில் ஒரு முடிவை எட்டுவதாகவும் தெரிவித்தனர்.

இதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தப் பகுதிக்குச் சென்று கல்குவாரியை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
