பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வருடத்துக்குள் ரூ. 1,750 நாள் சம்பளம் – ஜனாதிபதி அநுர உறுதி.

இந்த ஆண்டுக்குள் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

பதுளை, பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலையக மக்களுக்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெறும் 2 ஆயிரம் பயனாளர்களுக்கு ஜனாதிபதி, அடையாளமாக உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

“மலையக சமூகம் ஒரு சிறந்த பணியைச் செய்து வருகின்றது. அவர்கள் 202 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, ஓர் அரசாங்கமாக, அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளையும் வசதியான வாழ்க்கையையும் வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

ஓர் அங்குலேமேனும் காணி உரிமை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குக் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். இதற்குரிய வேலைத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும். 1,750 ரூபா நாளாந்த சம்பளம் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடத்துக்குள் இந்தச் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டங்களைச் சூழவுள்ள வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது குறித்தும், சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்குரிய சுகாதாரம் அரசின் பொறுப்பு. அதனைக் கம்பனிகளிடம் வழங்கத் தயாரில்லை.

மலையக மக்களுக்குரிய சமூக அந்தஸ்த்து, கலாசார உரிமை, அவர்களுக்குரிய அடையாளம் என்பன காக்கப்படும். அனைத்து இன மக்களுக்கும் இது பொருந்தும்.

மலையக மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தனர். இறந்த பின்பும் இந்த மண்ணுக்கு உரமாகினர். அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் அல்லர். அவர்களுக்குச் சம உரிமை உள்ளது.

பாரம்பரிய அரசியல் முகாம்களை நிராகரித்து, புதிய நம்பிக்கையுடன்தான் தேசிய மக்கள் சக்திக்கு மலைய மக்கள் வாக்களித்தனர். மக்கள் மத்தியில் இருந்து மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றம் வந்தனர். இது இலங்கை அரசியலில் மிக முக்கிய மாற்றமாகும். எங்கள் மீது வைத்த நம்பிக்கையே இது. அந்த நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம். அதற்கு எதிராகச் செயற்பட மாட்டோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.