ரணில் – சஜித் இணைவு: வரவேற்கின்றார் இராதா.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் கூறியதாவது:-
“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது காலத்தின் கட்டாயம். இது இதற்கு முன்னரே நடந்து இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து இருந்திருந்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும் விடயங்கள் நடந்திருக்கும்.
எனினும், கடந்த காலங்களில் இரு தலைவர்கள் மத்தியிலும் காணப்பட்ட தலைமைத்துவம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களில் விட்டுக் கொடுப்பற்ற நிலைமையால் அந்த முயற்சிகள் கைகூட முடியாது போயிருந்தன.
இவ்வாறு இணைந்து இருந்திருந்தால் முன்பு நடைபெற்ற பல்வேறு தேர்தலில் பல வெற்றிகரமாக சம்பவங்களைச் சந்தித்து இருக்கலாம்.
தற்போது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும். அதனை நாம் முழுமையாக வரவேற்பதோடு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராகவே உள்ளோம். இது விரைவிலேயே நடைபெற வேண்டும் என நாங்கள் இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்.
அடுத்து வருகின்ற தேர்தல்களைக் கையாள்வதற்கு இவ்விரு கட்சிகளும் இணைந்து உரிய தலைமை வகித்துச் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.” – என்றார்.
