மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுவிப்பு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெவில் வன்னியாராச்சியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம்16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நெவில் வன்னியாராச்சி சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம்மாதம் 2 ஆம் திகதி முன்னிலையாகிய போது கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
