பஸ் விபத்தில் நால்வர் சாவு! – 24 பேர் படுகாயம்.

குருநாகலில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலனறுவை – கதுருவெலவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகக் குருநாகலில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் 28 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காகக் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பின்னால் வந்த பஸ் அதிவேகமாகப் பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றது என்று தெரியவந்தது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.