யாழ். பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி, மகஸின்கள் மீட்பு! – சோதனை நடவடிக்கை தீவிரம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி – 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நூலக வளாகத்தின் மேற்கூரைப் பகுதியில் திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன்போது நேற்று வியாழக்கிழமை இரண்டு மகஸின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மகஸின்களும், வயர்களும் இன்று காலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டன.

இந்நிலையில், இன்று மீண்டும் மேற்கூரைப் பகுதியில் திருத்த வேலை இடம்பெற்ற நிலையில் அதன் அருகில் ரி – 56 ரக துப்பாக்கி, இரத்தக்கறை படிந்த சாரம், வயர்கள், மருந்துகள், பஞ்சுகள், மருந்து கட்டப் பயன்படுத்தப்படும் பன்டேஜ் துணிகள் என்பவை அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து மீண்டும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் அந்தப் பகுதிக்கு வந்து முழுமையாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.