விசேட அதிரடிப் படையணிக்கு வாகனங்கள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி.

விசேட அதிரடிப் படையணிக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர மோட்டார் ஊர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையின் கீழ் நாடளாவிய ரீதியில் 76 பிரதான முகாங்களும், 23 உப முகாங்களும் மற்றும் 14 விசேட பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.

இந்தப் படையணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள 314 மோட்டார் சைகக்கிள்களில் 90 சதவீதமானவை 10 வருடங்களுக்கு மேல் பழையவையாக இருக்கின்றமையால் தொடர்ச்சியாக இயந்திரக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

இந்நிலைமையால் விசேட அதிரடிப் படையால் மேற்கொள்ளப்படுகின்ற விசேட சுற்றிவளைப்புக்களைச் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு தடையாக அமைந்துள்ளன.

அதற்கமைய, போதைப்பொருள் தடுப்பு மற்றும் அமைப்பு ரீதியான பாதாள உலகக் குழுக்களை ஒழித்தல் போன்ற கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் விசேட அதிரடிப் படையணிக்கு 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர மோட்டார் ஊர்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.