கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட மூவர் யாழில் இன்று சிக்கினர்!
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு, பின்னர் கார் ஒன்றில் ஏறி, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றித் தப்பிச் சென்றிருந்தார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காரை ஒத்த காரில் யாழ்ப்பாணத்தில் பயணித்த, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண் ஒருவர் மற்றும் தென்னிலங்கை நபர் என மூவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தாம் கொழும்பில் காரை வாடகைக்குப் பெற்று யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்தனர் என்றும், தமக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, கொழும்பில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள விசேட குழு , கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாணம் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்புத் தரப்பினர் அதிகரித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
