மக்களை ஏமாற்றும் ‘பட்ஜட்’ – அநுர அரசைக் கடுமையாக விமர்சிக்கும் மஹிந்த அணி.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. “மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது” – என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறுகிய காலப் பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை. உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டல் இல்லை. இலக்கங்களைக் குறிப்பிடலாம். அதனை அடைவதற்குரிய வேலைத்திட்டமும் பாதீட்டில் இல்லை.
ஆக மொதத்தத்தில் எவ்வித அடிப்படையும் இன்றி மக்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டமே இதுவாகும்.” – என்றார்.
