ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட சஜித் தீர்மானம் – ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் தகவல்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சியின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து தெரிவித்தார் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களுக்காக இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியுள்ளார்.
