வடக்கு, கிழக்கில் வெள்ளப் பேரிடர்! – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

இலங்கைக்கு மிகவும் அண்மித்து உருவாக்கும் காற்றழுத்தம் மற்றும் காற்றுச் சுழற்சிகள் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்படச் சாத்தியம் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகக் கிடைத்து வருகின்ற கன மழை காரணமாக நிலம் நிரம்பியுள்ளது. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாள்களிலும் கிடைக்கவுள்ளன.

ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மிகப்பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாட்டின் அனைத்து மீனவர்களும் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை உரமிடல் மற்றும் கிருமி, களை நாசினி தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.

எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்திலும், எதிர்வரும் 29ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திலும் மிகமிகக் கனமழைக்குச் சாத்தியங்கள் உள்ளன.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.