இலங்கையில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது! – அநுர அரசு உறுதிமொழி.
இலங்கையில் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுவதை தேசிய மக்கள் சக்தி அரசு மறுத்துள்ளது.
இதன்படி, புதிய விநியோகஸ்தரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்ஏவின் கீழ் முதல் கப்பல் 2026 ஜனவரி 5 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆகையினால், எரிவாயு பற்றாக்குறை இருக்காது என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எரிவாயு வழங்குவதற்கான டெண்டர், முந்தைய ஓமானி நிறுவனத்துக்குப் பதிலாக ஜியோகாஸ் டிரேடிங் எஸ்.ஏ.க்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
“எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்குள் முதல் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வந்து சேரும். எனவே, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போல் எரிவாயு பற்றாக்குறை இருக்காது.” – என்றும் அவர் மேலும் கூறினார்.
