தையிட்டி விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகள் நான்கு கட்டடங்களாக விடுவிக்கப்படும் – உரிமையாளர்களிடம் யாழ். மாவட்ட செயலர் உறுதி.

“தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விகாரை அமைந்துள்ள காணியைத் தவிர ஏனைய காணிகளில் பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எமக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் உறுதியளித்துள்ளார்.”

இவ்வாறு காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தையிட்டி விகாரைக்காகக் காணிகளை இழந்தவர்களுக்கும் யாழ். மாவட்ட செயலருக்கு இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கணை உரிமையாளர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்ட செயலருடனான சந்திப்பின் போது, எமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அதன்போது, தையிட்டி திஸ்ஸ விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் மேற்கு பக்கமாக உள்ள காணிகளை முதல் கட்டமாக விடுவிப்பதாகவும், ஏனைய காணிகளில் விகாரை தவிர்ந்த ஏனைய கட்டுமானங்களை அகற்றி அந்தக் காணிகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்க இணக்கம் காணப்பட்டது. அதற்காகக் காணி விடுவிப்பானது 4 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது

விகாரை உள்ள காணி மூன்று தரப்பினருக்குச் சொந்தமானதாகக் காணப்படுகின்றது. அவர்களுக்கான தீர்வு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. மாற்றுக் காணி வழங்குவதா அல்லது நட்டஈடு வழங்குவதா என்று எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சந்திப்பில் எமக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டனவே தவிர தீர்வுகளாக எமது காணிகளை எம்மிடம் ஒப்படைக்காதமையால், நாம் திட்டமிட்டவாறு எதிர்வரும் 3ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுப்போம்.” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.