அம்பாறையில் அஷ்ரப் தாஹிர் எம்.பியின் ஏற்பாட்டில் கலந்தாய்வு! – இணையவழியில் ரிஷாத் எம்.பி.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிரின் ஏற்பாட்டில், கட்சியின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று நிந்தவூர் அழகாபுரியில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அமைப்பு, எதிர்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள், மேலும் பிரதேச மட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இதன்போது, கட்சியின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இணையவழியில் கலந்துரையாடலில் இணைந்து, கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுடன் நேரடியாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது உரையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி மற்றும் கலாசாரப் பிரிவதல் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.

ஓர் அரசியல் கட்சியின் சமூகப் பொறுப்பின் முக்கிய அங்கமாகக் கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்தவகையில், சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ச்சியான முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட மக்களின் தேவைகளுக்குச் சிறந்த தீர்வுகளை முன்வைக்கும் நோக்கில் அமைந்த இந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்தது என்று கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.