தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்: அழைப்பாணை வழங்கப்பட்டவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி.

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராடியமைக்காக வேலன் சுவாமிகள் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மற்றும் இன்று பொலிஸார் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்ததன் மூலம் தொடுக்கப்பட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சொந்தப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வேலன் சுவாமிகள், காணி உரிமையாளர் சாருஜன் உள்ளிட்ட ஐவர் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் விடுவிக்கப்படுகையில் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வழக்குத் தவணையிடப்பட்டது. எனினும் ஏற்கனவே கைதான ஐவரையும் இன்று மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதற்கு மேலதிகமாக குற்றப்பத்திரம் தாக்கள் செய்யப்பட்டு ஏலவே கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள், தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட ஐவரையும் உள்ளடக்கி மேலதிகமாக வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன், போராட்டத்தில் பங்குகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள், போராட்டத்தில் பங்கெடுக்கும் செயற்பாட்டளர்கள் எனப் பலரையும் உள்ளடக்கிக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஏற்கனவே தையிட்டி தொடர்பான வழக்குகளும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகளில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா, சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தலைமையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக 13 சட்டத்தரணிகள் கொண்ட குழாம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகினர்.

இவ்வழக்குகளில் பொலிஸ் தரப்பினர், நீதிமன்றக் கட்டளையைப் போராட்டக்காரர்கள் மீறினர் என்றும், இனநல்லிணக்கத்துக்குப் பங்கம் ஏற்படுத்தினர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனைக் கடுமையாக ஆட்சேபித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அமைதியான வழியில் இடம்பெற்ற போராட்டத்தை அடக்கி இருக்கக்கூடாது எனவும், பொலிஸாரே சட்டத்தை மீறியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே 1993ஆம் ஆண்டு இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முன்வைக்கப்பட்ட வழக்குகளில் போராடுவதற்கு உள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை முன்வைத்து அவர் வாதிட்டதுடன் இவ்வாறானதோர் வழக்கைத் தாக்கல் செய்வதற்குப் பொலிஸாருக்கு உரிமையில்லை என்றும், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தனது சட்ட ரீதியிலான அதிகாரத்தைப் பிரயோகிக்கும்போது அதனைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத கடிதம் ஒன்றை பொலிஸார் அனுப்பியுள்ளனர் என்றும், மேலும் பொலிஸாரே அங்கு வன்முறையைத் தூண்டும் வகையில் தேடித் தேடி கைதுகளை மேற்கொண்டனர் என்றும் வாதிட்டார்.

பொலிஸாரின் கைதுகளின்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தாக்கப்பட்டமை தொடர்பான மருத்துவ அறிக்கையையும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மன்றில் காண்பித்து வாதங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், இங்கு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 106இன் கீழ் தொல்லைகள் பற்றிய அவசர விடயங்களில் தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு அதிகமாக வலுவுடையதாக இருத்தல் ஆகாது என மேலும் சட்டத் தீர்ப்புக்களை முன்வைத்து இந்த வழக்கை முடிவுறுத்துமாறு கோரி வாதிட்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா, பொதுத்தொல்லைகள் மீதே இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதால் இவ்வழக்கைப் பொலிஸார் இவ்வாறாகத் தாக்கல் செய்திருக்க முடியாது எனவும், பொலிஸாரே அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் எனவும், இது சாதராணமாகப் பொலிஸார் மேலிட உத்தரவின் பிரகாரமே மேற்கொண்ட நடவடிக்கை எனவும், சாதாரணமாக இடம்பெறுகின்ற பொதுத் தொல்லைகள் தொடர்பாக பிரயோகிக்கப்படக்கூடிய சட்டம் ஒன்றை மக்களின் ஐனநாயக உரிமைகளில் பங்கம் ஏற்படுத்துவதற்காகப் பிரயோகிக்க முடியாது எனவும் சட்ட ரீதியிலான பொலிஸாரின் தவறுகளை முன்னிறுத்தி வாதிட்டார்.

பின்னரான நிலைமைகளில் தொடர்ச்சியாக இவ்விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அவ்வழக்குகளிலும் பொலிஸார் மன்றில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தரணிகள் நிராகரித்தனர்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கருத்தில்கொண்ட நீதிவான் சந்தேகநபர்களைச் சொந்தப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.