சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு பத்து வருட கடூழியச் சிறைத் தண்டனை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு.

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி வழக்குத் தொடரப்பட்டது.

தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி, 16 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்புணர்வு புரிந்தார் என்று சந்தேகநபருக்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேகநபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.

அந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றத்தில் தீர்ப்பை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.