அநுர மீது தமிழரசுக்கு நம்பிக்கை.
“ஜனாதிபதி அநுரகுமார மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஜனாதிபதியின் வடக்கு வருகை தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் எமக்கு விடுக்கப்படவில்லை.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாண விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் வடக்குக்கு வருகை தந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தவர்களாகவும், அவர்களைக் காணாமல் ஆக்கியவர்களாகவும், இடம்பெயரக் காரணமானவர்களாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பு காணப்பட்டது.
ஆனால், இந்தத் தலைமுறை, ஜனாதிபதிகளின் கொடூரமான முகத்தைப் பார்க்கவில்லை. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அத்தகைய கொடூரமான முகம் இருப்பதாக நான் கூறவரவில்லை. இளம் துடிப்பான நல்ல விடயங்களைப் பேசுகின்ற ஒரு ஜனாதிபதியாக அவர் இருக்கின்றார்.
எங்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கின்றது. நாட்டை முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
ஜனாதிபதி அநுரவின் வடக்கு வருகை குறித்து பத்திரிகைகள் வாயிலாகவே நாம் அறிந்ததுடன், அதிகாரபூர்வமான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கூட, ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ வடக்குக்கு வரும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் கலந்துரையாடும் பண்பு இருந்தது. ஆனால், தற்போதைய அரசு தனது கட்சி உறுப்பினர்களுடன் மட்டுமே ஆலோசனைகளை மேற்கொள்கின்றது.
ஜனாதிபதி மக்களைச் சந்திப்பது வரவேற்கத்தக்கது. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை அவர் அறிந்து கொள்ளவேண்டும். இந்த நாட்டை ஒரு முன்னேற்றகரமான திசைக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், தமிழ் மக்களும் ஏனைய இனங்களைப் போல சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான சூழலை எவராவது ஏற்ப்படுத்தினால் அத்தகைய முயற்சிக்குத் நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம். அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும்.” – என்றார்.
