கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்கள் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மத ரீதியான வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசு முன்னெடுக்கும் திட்டம் குறித்து இந்தச் சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியமையுடன், இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கத்தோலிக்கச் சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திச் செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும் அருட்தந்தைமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.