சீதையம்மனை வழிபட்டார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று வியாழக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா – சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஆலயத்துக்கு வருகை தந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்த வரவேற்பு நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மஞ்சுல சுரவீர ஆராச்சி, நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் உள்ளிட்ட ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அனுமான் பாதத்தை தரிசித்ததுடன், புனித கங்கையில் இறங்கி கங்கா தரிசனமும் செய்தார். இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிர்வாக சபை உறுப்பினர்களுடன் அவர் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மேலும், இந்திய அரசின் உதவியுடன் இராகலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் பயனாளிகள், அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, இந்திய அரசுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
அவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.






