சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு! – ஜனாதிபதிக்கு வீரசேகர மிரட்டல்.
“இந்த நாட்டின் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் என்.பி.பி. அரசு செயற்படுகின்றது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விளங்கிக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த தேரர்கள் உட்பட 9 பேர் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது பலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்குச் சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர்.
9 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசு பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசமைப்புக்கு முரணாகச் செயற்படுகின்றது.
திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோரப் பாதுகாப்பு அதிகார சபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுராதபுரத்தைக் கடந்து யாழ்ப்பாணத்துக்குப் பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருகின்றனர் என்று ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது.
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும்.” – என்றார்.
