இல்லாத இனவாதத்தை பேசுவதாலேயே சிக்கல்! – இப்படிக் கூறுகின்றது சஜித் அணி.

“இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். நாட்டில் இல்லாத இனவாதம் தொடர்பாகக் கதைப்பதுதான் இங்குள்ள பிரச்சினை.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஊடகங்களிடம் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்குச் செல்லும்போது அந்தந்தப் பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைக்கின்றார்.

இது ஏற்புடையது அல்ல. அரசாங்க தலைவர் பொது கொள்கையுடன் பயணிக்க வேண்டும். நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரே கொள்கை அடிப்படையிலேயே கருத்துகளை முன்வைக்க வேண்டும். ஆனால் தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகின்றார்.

நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்கின்றனர். அதனால் இனவாதத்தை தோற்றுவிக்கும் விதத்தில் கருத்துக்களை எவரும் முன்வைக்ககூடாது.

அநுரகுமார திஸாநாயக்க என்பவர் எதிர்க்கட்சித் தலைவர் அல்லர். அவர் நாட்டின் ஜனாதிபதி. ஆகவே, பொறுப்புடன் கருத்துகளை வெளியிட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.