பருத்தித்துறை நகர சபையின் ‘பட்ஜட்’ ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றம்.

பருத்தித்துறை நகர சபையின் ‘பட்ஜட்’ ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்ப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கால் இன்று நிறைவேற்றப்பட்டது.

15 உறுப்பினர்களைக் கொண்ட  இந்தச் சபையில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள் பட்ஜட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர்  உறுப்பினரும் சுயேச்சையான சமத்துவக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.

எஞ்சிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் சபைக்குச் சமுகமளிக்கவில்லை.

இந்தநிலையில், பட்ஜட்டுக்கு ஆதரவாக7 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும்  கிடைத்த நிலையில் ஒரு மேலதிக வாக்கால் அது நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் பருத்தித்துறை நகர சபைத் தலைவர் யோ. இருதயராஜா தலைமையில் சபையின் விசேட கூட்டம் ஆரம்பமானது. இதன்போது தலைவர் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து பேசினார். முடிவில் அதற்கான அங்கீகாரத்துக்கு விட்டார்.

பட்ஜட் அங்கீகாரத்துக்கு வாக்கெடுப்பு இரகசியமாகவா? பகிரங்கமாகவா? நடத்த வேண்டும் என சபையோரை தலைவர் வினாவினார்.

பகிரங்கமாக வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என சபையோர் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்களிப்பதற்கு முன்னர்  எதிராக வாக்களித்த தமிழ்த் தேசிய மக்கள் மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அதிருப்திக் கருத்துக்களை வெளியிட்டனர். வாக்கெடுப்பு  முடிந்த பின்னர் அவர்களுக்குப் பதிலளித்த  சபைத் தலைவர், “உங்களின் அதிருப்திகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கின்றேன். சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களுக்கு அடுத்த கூட்டத்தில் பதில்  அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.