வவுனியாவில் பொலிஸாரை மோதி விட்டு தப்பியோடிய வான்; சாரதி மடக்கிப் பிடிப்பு – இரு போக்குவரத்துப் பொலிஸார் காயம்.
வவுனியாவில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற சிறிய ரக வாகனம், துரத்திச் சென்ற போக்குவரத்துப் பொலிஸாரை மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு போக்குவரத்துப் பொலிஸார் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார், பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர். எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் கட்டளையைப் பொருட்படுத்தாது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
இதையடுத்து, போக்குவரத்துப் பொலிஸார் குறித்த வாகனத்தை துரத்திச் சென்ற நிலையில், வாகனம் பொலிஸார் மீது மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் போக்குவரத்துப் பொலிஸார் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர். அவர்களது மோட்டார் சைக்கிள் அந்த வாகனத்தின் கீழ் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன் பின்னர், வாகனத்தின் சாரதி வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
காயமடைந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவரும் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற சாரதி, வவுனியா – ஏ 9 வீதி பூஓயா பாலத்துக்கு அருகிலுள்ள இராணுவ முகாம் பகுதியை அண்மித்த பகுதியில் சென்றபோது, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், சம்பந்தப்பட்ட வாகனத்தையும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஈரப்பெரியகுளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
