வவுனியா மாவட்ட செயலகத்தில் தமிழ் ஊடகர்கள் புறக்கணிப்பு! சிங்கள ஊடகர்களுக்கு மட்டும் அழைப்பு என்று குற்றச்சாட்டு.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் மற்றும் ஊடகச் சந்திப்புகளுக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிகழ்வுகளுக்கு சிங்கள ஊடகவியலாளர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர் எனவும் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் வவுனியாவுக்கு வருகை தந்த நீதித்துறை அமைச்சர் மாவட்ட செயலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தினார். அந்த ஊடகச் சந்திப்பில் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட போதிலும், எந்தவொரு தமிழ் ஊடகவியலாளருக்கும் அழைப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் தொடர்பாடல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், தொடர்ச்சியாகப் பல அரச நிகழ்வுகளிலிருந்து தமிழ் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட செயலகத்தின் கவனத்துக்குப் பல தடவைகள் கொண்டு சென்றிருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை எனத் தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்திடம் முறையிடவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.