கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக வவுனியாவில் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புகளும்! – 30ஆம் திகதி நெடுங்கேணியில் கவனவீர்ப்புப் போராட்டம்.
தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ள அரசால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி, வவுனியா மாவட்ட பொது அமைப்புகளுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வவுனியா – குருமன்காட்டில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாகக் கலந்துகொண்டவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்துகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக, எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனவீர்ப்புப் போராட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
