யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கைபேசி திருடிய இளைஞருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளையில் அத்துமீறி நுழைந்து கையடக்கத் தொலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வேளையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கண்காணிப்பையும் மீறி அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், சுத்திகரிப்புப் பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்கத் தொலைபேசியைக் களவாடியுள்ளார்.

இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இளைஞரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, நேற்று மேற்படி இளைஞரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது, அந்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.