புதிய கணக்காய்வாளர் நாயகம்: நாளைமறுதினம் இறுதி முடிவு!
புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாளைமறுதினம் அரசமைப்புப் பேரவை கூடவுள்ளது என்றும் அவர் கூறினார்.
புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பப்பட்ட பெயர்களை அரசமைப்புப் பேரவை நிராகரித்திருந்தது.
இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகமாகப் பதவி வகித்த டிபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன 2025 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இதுவரையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் தெரிவுசெய்யப்படவில்லை.
பதில் கணக்காய்வாளர் நாயகமாகச் செயற்பட்டவரின் பதவிக் காலமும் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை பிரேரிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசமைப்புப் பேரவை நாளைமறுதினம் கூடுகின்றது.
