நாளை முதல் வைத்தியர்களின் தொடர் வேலைநிறுத்தம் தீவிரம்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26ஆம் திகதி முழு வைத்தியசாலை அமைப்பையும் உள்ளடக்கி தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இதன்போது, கடந்த 26 ஆம் திகதி கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு, அவர்களின் பிரச்சினைகளுக்கு நேர்மறையான தீர்வைக்கொண்டு வந்து அதை அறிவிக்க சுகாதார அமைச்சுக்கு 48 மணிநேர அவகாசம் வழங்கத் தீர்மானித்தது.

இருப்பினும், சுகாதார அமைச்சு, அதற்கான தீர்வை வழங்காததால், நாளை 2ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், அதைத் தொடரவும் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வைத்தியசாலையில் கிடைக்காத மருந்துகள் மற்றும் உபகரணங்களைப் பெறுவதற்காக நோயாளர்களுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்தி வைத்தல், வைத்தியசாலையில் கிடைக்காத ஆய்வக சோதனைகளை நடத்துவதற்காக நோயாளர்களுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்தி வைத்தல், அரசியல் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தன்னார்வ பங்கேற்பிலிருந்து விலகுதல், அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை இல்லாமல் வைத்தியசாலை அமைப்பில் திறக்கப்பட்ட புதிய வைத்தியசாலை வார்டுகள் மற்றும் பிரிவுகளுக்கு வைத்தியர்களை நியமிப்பதை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.