ஜனநாயகத்தைச் சவப்பெட்டிக்குள் தள்ளும் வகையில் புதிய சட்டமூலம் – உயர்நீதிமன்றம் செல்வேன் பீரிஸ் எச்சரிக்கை.
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்” என்ற பெயரில் அரசு தயாரித்துள்ள புதிய சட்ட வரைவு, நாட்டின் ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் முற்றாக அழித்துவிடும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு, பொரளையிலுள்ள என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் பாரதூரமான அம்சங்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘பயங்கரவாதம்’ என்பதற்கு மிக விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 13 வகையான சாதாரண குற்றச் செயல்களைக்கூட பயங்கரவாதமாகச் சித்தரித்துத் தண்டனை வழங்க அரசு முற்படுகின்றது. இது தனிமனித சுதந்திரத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.
இந்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதிக்கு வரைமுறையற்ற அதிகாரங்கள் கிடைக்கும்.
எந்தவொரு அமைப்பையும் ஜனாதிபதி தனது விருப்பப்படி ‘சட்டவிரோதமானது’ என அறிவிக்க முடியும்.
எந்தவொரு பொது இடத்தையும் ‘தடை செய்யப்பட்ட பகுதி’யாகப் பிரகடனப்படுத்தும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் தடை செய்யப்பட்ட ஒரு பகுதியை அல்லது அங்கு நடக்கும் விடயங்களைப் பற்றி ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிட்டால், அவர்களுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை அல்லது 30 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும். இது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, உண்மைகளை மறைக்கும் செயலாகும்.
நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவரை, நீதிமன்றத்தின் அனுமதியின்றிப் பொலிஸ் தடுப்புக் காவலுக்கு மாற்றும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைப்பதுடன், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பறிக்கும் செயலாகும்.
அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைச் சவப்பெட்டிக்குள் தள்ளும் இந்த மனிதாபிமானமற்ற சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவுடன், அதனை எதிர்த்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன்.” – என்றார்.
