மக்களைத் திசைதிருப்ப வேண்டாம்! – சர்வதேச தரத்துடனேயே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை அடியோடு நிராகரித்தது அரசு.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு குறித்து எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என அரச தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நவீன கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவுமே இந்தப் புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்” என்ற பெயரில் அரசு தயாரித்துள்ள புதிய சட்ட வரைவு, நாட்டின் ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் முற்றாக அழித்துவிடும். அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைச் சவப்பெட்டிக்குள் தள்ளும் இந்த மனிதாபிமானமற்ற சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவுடன், அதனை எதிர்த்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் புதிய வடிவங்களை எடுத்துள்ளது. காலாவதியான சட்டங்களைக் கொண்டு தற்கால சவால்களை எதிர்கொள்ள முடியாது. ‘பயங்கரவாதம்’ குறித்த விரிவான வரைவிலக்கணம் என்பது குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது சாதாரண பொதுமக்களை எவ்விதத்திலும் பாதிக்காது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, உடனடி முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பு நாட்டின் தலைவருக்கு உண்டு. தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் அமைப்புகள் குறித்த அறிவிப்புகள் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். இது தனிப்பட்ட விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது.
ஊடக சுதந்திரத்தை முடக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஆனால், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நுழைந்து தகவல்களைச் சேகரிப்பது நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைக்கக்கூடும். அத்தகைய தீவிரமான சந்தர்ப்பங்களில் மட்டுமே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறுப்புள்ள ஊடகத்துறைக்கு இந்தச் சட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
எதிர்க்கட்சியினர் கூறுவது போல் இது ஒரு மனிதாபிமானமற்ற சட்டம் அல்ல. சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளை உள்வாங்கியே இந்தப் புதிய வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. யாருக்கேனும் இதில் அதிருப்தி இருப்பின், அதனை நாடாளுமன்ற விவாதங்களின் போதோ அல்லது நீதிமன்றத்தின் ஊடாகவோ அணுகுவதற்குப் பூரண சுதந்திரம் உள்ளது.” – என்றார்.
