யாழ். மாநகர சபையில் ரகளை! அப்பிள் கடை பிரேரணையைக் கிழித்தெறிந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வில், அப்பிள் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் பிரேரணையைக் கிழித்தெறிந்து சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

யாழ். மத்திய பஸ் நிலையச் சூழலில் அமைந்துள்ள அப்பிள் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று காலை மாநகர சபை முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய சபை அமர்வின் போது இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள், முறையான மாற்றுத் திட்டம் அல்லது பொறிமுறை இன்றி இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டுவரக் கூடாது என வலியுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இப்பிரேரணை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், இந்த விடயத்தில் மேயர் அலட்சியப் போக்குடன் செயற்பட்டார் என்றும், உரிய தீர்வை வழங்காது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சபையை முன்னெடுத்துச் சென்றார் என்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மேயரின் இந்தச் செயலைக் கண்டித்த அவர்கள், குறித்த பிரேரணையைக் கிழித்தெறிந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், சபையை விட்டு வெளியேறினர்.

அப்பிள் கடை வியாபாரிகளின் போராட்டம் மற்றும் சபைக்குள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் அதிரடி வெளிநடப்பு காரணமாக யாழ். மாநகர சபை வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.