ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் மன்னார் இளைஞரே உயிரிழப்பு! – வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்.

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர், மன்னாரைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி – வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய முஜாஹித் முஹம்மது சஹ்ரின் எனத் தெரியவந்துள்ளது.

இந்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருகின்றார் என்றும், நேற்று இரவு தலைமுடி வெட்ட சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குச் சென்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று இரவு சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்ககப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்த ஏனையவர்கள் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரி – 56 ரக துப்பாக்கி இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்பான சி.சி.ரி.வி. காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.