பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி கோரிக்கை.

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமையானது, நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும்.

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதால், இந்தப் படுகொலை குறித்து நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறும் என்பதில் எமக்குத் துளியும் நம்பிக்கையில்லை.

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அதற்குப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியைத் துறக்க வேண்டும்.

அத்துடன், நாட்டிலுள்ள சட்டத்தரணிகளின் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.” – என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.