இன்று இலங்கை வருகிறார் பிரிட்டன் துணைப் பிரதமர் ஜனாதிபதி, பிரதமருடன் உயர்மட்டப் பேச்சு தமிழ்த் தலைவர்களையும் சந்திக்கின்றார்.
பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு இராஜதந்திரப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமையவுள்ளது.
இந்தப் பயணத்தில் பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுகளை நடத்தவுள்ளார்.
டேவிட் லம்மி இன்று காலை இலங்கை வந்தடைந்து, திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் இன்று மாலையே இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். அவர் தமிழ்த் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்புகளில், இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், அபிவிருத்தி ஆதரவு, கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு உட்படப் பல துறைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பயணத்தின் பிரதான அம்சமாக ஐ.நா. பணியகத்தில் நடைபெறும் நிகழ்வில் குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பரப்புரைக்கான சாசனம் தொடர்பான உடன்பாட்டிலும் டேவிட் லாமி கையெழுத்திடுவார்.
இந்த சாசனம், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச முயற்சிகளை வலுப்படுத்துவதையும், குடும்ப அடிப்படையிலான பராமரிப்பு முறைகளை ஊக்குவிப்பதையும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கமான சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டேவிட் லம்மியின் வருகை, புதிய இலங்கை அரசுடன் பிரிட்டன் இணைந்து செயற்படுவதற்கான உறுதியை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய இராஜதந்திர முன்னேற்றமாகப் பார்க்கப்படுகின்றது.
