ஐ.எம்.எப். முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா நேற்று இலங்கை வருகை.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தனர்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதிநிதிகள் குழுவை வரவேற்றார்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களையும் அதன் தாக்கத்தையும் நேரடியாகப் பார்வையிடும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருப்பதுடன், இன்று முற்பகல் கம்பளை பகுதிக்கும் அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.

பின்னர், கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அனர்த்தத்துக்குப் பிறகு இலங்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து மேற்படி கலந்துரையாடல்களின்போது விசேட கவனம் செலுத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.