பஸ்ஸை முந்த முயன்ற கார் மோதி பச்சிளம் சிறுமி பரிதாப உயிரிழப்பு! – கம்பளையில் சோகம்.
கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கம்பளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றுள்ளது. இதன்போது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் அந்தக் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் காரின் ஓட்டுநரை எத்கால பொலிஸார் கைது செய்துள்ளனர். அஜாக்கிரதையாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
