மக்கள் செல்வாக்கைச் சோதிக்க இதுவே வழி மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள் – அரசுக்கு ரோஹித எம்.பி. பகிரங்க சவால்

“அரசின் மீதான மக்கள் செல்வாக்கு எந்த நிலையில் உள்ளது என்பதைப் பரிசோதிக்க உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.”

இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அரசுக்குச் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அநுர அரசு தமக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக இன்னமும் நம்பினால், துணிச்சலுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தேர்தலை அறிவியுங்கள். எதிர்க்கட்சியாகிய நாங்கள் எந்நேரமும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் அது நிரந்தரமானது என்று எண்ணக் கூடாது என எச்சரித்த அவர், “அதிகாரம் என்பது தற்காலிகமானது என்பதை வரலாறு உணர்த்தும். அதிகாரம் பறிபோகும் போது மக்கள் எங்களை எள்ளிநகையாடினார்கள், ஆனால் இப்போது ஆளும் தரப்பினரை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றார்கள். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்” – என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.