உரைகள் இரத்தால் நாமல் அதிருப்தி!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்டிருந்த தனது உரைகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“பல தலைமுறைகளாகச் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்கும், அறிவார்ந்த விவாதங்களுக்கும் பெயர்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் உரையாற்ற நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஆனால், திட்டமிடப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அந்த நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
பல்கலைக்கழகங்கள் என்பவை விவாதங்களின் மூலம் தீர்வுகளைக் காணும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் மூலம் கருத்துக்களை மௌனிக்கச் செய்யும் இடங்களாக மாறக்கூடாது.
எனது கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடுவதை நான் எப்போதும் வரவேற்கின்றேன். ஏனெனில், மாற்றுக் கருத்துக்கள் மோதிக் கொள்ளும் போதே உண்மையான நல்லிணக்கமும் முன்னேற்றமும் ஏற்படும். விவாதங்களைத் தடுப்பது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தி, சமூகத்தில் பிரிவினையையே வளர்க்கும்.” – என்று நாமல் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு அழைப்பு விடுத்த ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு சூழலில் இத்தகைய விவாதங்கள் மீண்டும் அமையும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
