“பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்:” ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிப்பு!

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவ்வமைப்பின் சேகரிப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஊடக சந்திப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துகள்:-

அரசின் வாக்குறுதி மீறல்:

“அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் இரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியுடனேயே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், பழைய சட்டத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை முன்வைப்பது மக்கள் விரோதச் செயலாகும்.”

நீதியற்ற தடுத்துவைப்பு:

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக அநியாயமாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களுக்குக் கூட அவர்கள் இழந்த காலத்திற்கான எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.”

உரிமைகள் பறிப்பு:

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாதாரண குடிமக்களின் கருத்துச் சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை மற்றும் தனியுரிமை என்பன கடுமையாகப் பாதிக்கப்படும்.”

இந்தச் சட்ட வரைவு குறித்து நீதி அமைச்சுக்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் நோக்கில், திரட்டப்பட்ட அனைத்து கையொப்பங்களும் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.