அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் ‘பொடி லஸ்ஸி’
பாதாள உலகக் குழு உறுப்பினரும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் (ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, இந்தியாவில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 05.55 மணியளவில் மும்பையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL – 142 விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கு விசேட பொலிஸ் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்ட அவர், பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்காக எல்பிட்டிய பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் இலங்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொடி லஸ்ஸி, கடந்த 2024 டிசம்பர் 9 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கடல் வழியாகச் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளியேற முயன்றபோது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் வைத்து இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
