யாழில் பொலிஸார் அதிரடி வேட்டை! இரு பெண்கள் உட்பட 13 பேர் கைது!!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த திருட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய 13 பேரை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் வருமாறு:-
யாழ். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றின் கதவை உடைத்து, அங்கிருந்த இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் பெறுமதிமிக்க கையடக்கத் தொலைபேசி என்பவற்றைத் திருடிய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, நெடுங்குளம் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து நான்கரை இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவரைத் தேடிப் பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கணிசமான அளவு போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களிடமும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
யாழ். நகரில் அதிகரித்து வரும் திருட்டு மற்றும் போதைப்பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பொலிஸ் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
