பருத்தித்துறைக் கடலில் மாயமான இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! – தொழிலுக்குச் சென்ற வேளை நேர்ந்த விபரீதம்.
யாழ். வடமராட்சி வடக்கு, பருத்தித்துறைக் கடலில் மீன்பிடி நடவடிக்கையின் போது தவறி விழுந்து காணாமல்போன தொழிலாளி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:-
பருத்தித்துறை கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குத் தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது, அவர்கள் சென்ற படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது. அதனைச் சீர்செய்ய முற்பட்ட போது, படகிலிருந்த ஒரு தொழிலாளி எதிர்பாராத விதமாகத் தவறி கடலில் விழுந்து அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவருடன் சென்ற சக தொழிலாளி வழங்கிய தகவலைத் தொடர்ந்து, பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் உடனடியாகத் தேடுதல் பணியில் இறங்கினர். சுமார் 25 இற்கும் மேற்பட்ட படகுகளில் சிதறிச் சென்று தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் அந்தத் தொழிலாளியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டது.
இச்சம்பவத்தில் பருத்தித்துறை, கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது 23) என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
23 வயதான இளம் தந்தை ஒருவரின் உயிரிழப்பு பருத்தித்துறை – கொட்டடி மீனவக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
