மின்னேரியாவில் மும்முனை விபத்து: ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்..
ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியின் மின்னேரியா பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை இன்று காலை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, மற்றுமொரு பஸ்ஸுடனும், அதேவேளை நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துடனும் மோதியதில் இந்த மும்முனை விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பஸ்களில் பயணித்த 7 பேர் உட்பட மொத்தம் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக ஹபரணை – பொலன்னறுவை வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்ததுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
