சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் – கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் அவசர எச்சரிக்கை.

இலங்கைக் கடல் எல்லையைத் தாண்டி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்தப் பதற்றத்தின் விளைவாகப் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான இக்கட்டான தருணங்களில் நமது மீனவர்கள் சர்வதேச கடற்பரப்புக்குச் சென்றால், அவர்களே நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.” – என்று குறிப்பிட்டார்.

மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “நமது மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடிய சூழல் இது. எனவே, இந்தப் பதற்ற நிலை தணியும் வரை எமது நாட்டின் கடல் எல்லைகளுக்கு அப்பால் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்துக் கடற்றொழிலாளர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று தெரிவித்தார்.

ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மையப்படுத்தியே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.