யாழ்ப்பாணத்தில் பெரும் சோகம் பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பயணத்தில் படகு கவிழ்ந்து இருவர் மரணம்! – குருநகர் கடற்பரப்பில் அதிர்ச்சி * 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

யாழ்ப்பாணம், பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவுக்குப் பக்திப் பரவசத்துடன் சென்ற பக்தர்களின் வாழ்வில் கடலலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருநகர் பகுதியில் இருந்து சுமார் 25 பக்தர்களுடன் புறப்பட்ட படகு, நடுக் கடலில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகித் தலைகீழாகக் கவிழ்ந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை பாலைதீவு ஆலயத் திருவிழாவுக்காக குருநகர் கடற்பரப்பிலிருந்து விசைப்படை படகு ஒன்று புறப்பட்டது. கரை தாண்டிச் சிறிது நேரத்திலேயே படகு நிலைதடுமாறி கடலில் மூழ்கியது. படகில் இருந்த சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் அலறிக் கூச்சலிட்டபடி கடலினுள் விழுந்தனர்.

தகவலறிந்ததும் அப்பகுதி மீனவர்களும் கடற்படையினரும் உடனடியாக மீட்புப் பணியில் குதித்தனர். எனினும், கடலில் மூழ்கிய இருவரை உயிருடன் மீட்க முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள்:-

* ஸ்டீபன் பிரான்சிஸ் (வயது 57) – நாவற்குழி.
* எம். ஜோசப் (வயது 80) – பழைய பூங்கா சாலை, குருநகர்.

கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 12 பேர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், சாதாரண விடுதிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில்:-

பருத்தித்துறையைச் சேர்ந்த பரமேஸ்வரி செபஸ்தியாம்பிள்ளை (வயது 79) மற்றும் உரும்பிராயைச் சேர்ந்த உதயகுமாரி (வயது 63) ஆகிய இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சாதாரண சிகிச்சைப் பிரிவில்:-

இளவாலை, மாதகல், மன்னார் – பேசாலை, விசுவமடு மற்றும் கம்பஹா ஆகிய இடங்களைச் சேர்ந்த 10 பேர் தொடர்ந்தும் சாதாரண சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 வயது சிறுவன் ஒருவனும் அடங்குகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து அதிக சுமை காரணமாக ஏற்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு காரணமா என்பது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கடற்படையினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருவிழா உற்சாகத்தில் இருந்த குருநகர் மற்றும் யாழ். குடாநாடு முழுவதும் இந்தச் சம்பவத்தால் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.