யாழ். படகு விபத்து: அவசர விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடற்படை விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், துயரத்தில் இருக்கும் அந்தக் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

விபத்து தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அமைச்சர், பின்வரும் விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்:

* விபத்துக்குள்ளான படகு பயணத்துக்கு உகந்த நிலையில் இருந்ததா?

* பயணிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அமைந்ததா?

* கடல் பயணத்தின்போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டனவா?

இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளை எவ்வித தாமதமுமின்றி தீவிரப்படுத்துமாறும், அதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.