ஈரானியக் கப்பலில் வந்த 208 பேரும் பத்திரமாக மீட்பு!
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘ஐரிஸ் புசேஹெரின்’ என்ற ஈரானியக் கப்பலில் பயணித்த 208 பணியாளர்களும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உரிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஈரானியப் பணியாளர்கள் அனைவரும், மேலதிக நடவடிக்கைகளுக்காக வெலிசர கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், குறித்த ஈரானியக் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியப் போர்க்கப்பல் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இந்தியாவும் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
