உலகப் பொருளாதாரமே முடங்கும் அபாயம் அமைதி வலயத்தை அழித்துவிடாதீர்கள்!

“இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் போர்ச் சூழல் உருவானால், அது இலங்கையை மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பாரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வதேச கடல் பகுதியில், இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதாரக் கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் ஈரானியக் கப்பல் தாக்குதலுக்குள்ளான விடயம் கவலையளிக்கின்றது. இலங்கை எப்போதும் அமைதியை விரும்பும் ஒரு நாடு. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் நாம் எத்தரப்புக்கும் சார்பானவர்கள் அல்லர். பிராந்திய ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் பேணுவதையே நாம் வலியுறுத்துகின்றோம்.

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையிலிருந்து இலங்கை சில கிலோமீற்றர் தொலைவிலேயே அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 60 ஆயிரம் கப்பல்கள் இலங்கையைக் கடந்து செல்கின்றன. உலகுக்கான பெருமளவிலான எரிபொருள் விநியோகம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகின்றது. எனவே, இப்பகுதியில் மோதல்கள் ஏற்படுவதை நாம் எக்காரணம் கொண்டும் விரும்பவில்லை.

இந்து சமுத்திரத்தில் மோதல்கள் நீடித்தால், அது இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தைச் செலுத்தும்.

கடல் வழிப் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டால் வர்த்தகம் பாதிக்கப்படும்.

மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் வருவாய் குறையக்கூடும்.

பிராந்திய அமைதியின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்படலாம்.

இந்தப் போர்ச் சூழல் சில வாரங்களுக்குள் முடிவுக்கு வந்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால் இது நீண்டகாலம் நீடித்தால், இலங்கை கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே, அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.