இரண்டே மாதங்களில் 422 பேர் பரிதாபப் பலி! – இலங்கையில் கோரத்தாண்டவமாடும் வீதி விபத்துக்கள்

இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவான விபத்துக்கள் தொடர்பான தரவுகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 3 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மிக மோசமான 405 விபத்துச் சம்பவங்களில் சிக்கி 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

866 விபத்துச் சம்பவங்கள் பாரதூரமானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

1,730 விபத்துச் சம்பவங்களில் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

641 விபத்துக்களில் வாகனங்கள் மற்றும் ஏனைய உடமைகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பெறுமதியான மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் வீதி ஒழுங்குமுறைகளையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிவேகம், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துதல் மற்றும் வீதி விதிகளை மீறுதல் போன்றவையே இவ்வாறான விபத்துக்களுக்குப் பிரதான காரணங்களாக அமைவதாகவும் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.